Breaking News
‘ஒற்றுமைக்கான சிலை’ திறப்பு விழா: இன்றைய விழாவானது, இந்திய வரலாற்றில் அழிக்கவே முடியாத மிக முக்கியமான விழா பிரதமர் மோடி

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.

இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கின.

மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து சென்றன.

பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-

இந்தியாவை உருவாக்கியவர், சர்தார் வல்லபாய் படேல். படேல் சிலையை திறந்து வைத்ததில் பெருமைப்படுகிறேன்.இந்தியர் அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.சிலை திறந்து வைத்ததை கவுரவமாக கருதுகிறேன்

இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல். அனைத்து இந்தியர்களும் இந்த தருணத்தை கொண்டாடி வருகின்றனர். படேலின் முயற்சிகளே, இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம்.

சுதந்திரம் பெற்றதும், படேல் எடுத்த முயற்சிகளால், இந்தியா இன்று ஒன்றிணைந்து இருக்கிறது. இன்றைய விழாவானது, இந்திய வரலாற்றில் அழிக்கவே முடியாத மிக முக்கியமான விழா.

“நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. அரசு தொடங்கிய முயற்சிக்கு இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகள் ஆதரவு அளித்தனர்” “லட்சக்கணக்கன விவசாயிகள், தங்களின் விவசாய கருவிகளின் இரும்பு மற்றும் மணலை சிலை தயாரிக்க தந்தனர்” என கூறினார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.