அரசு மருத்துவமனையில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலி கடித்து உயிரிழப்பு?
பீகார் மாநில அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்து ஒன்பது நாட்களே ஆன பச்சிளங்குழந்தை, எலி கடித்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மதுபானி மாவட்டம் நஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்து உள்ளது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தர்பங்கா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, எலி கடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு பால் புகட்ட தாய் சென்றபோது, குழந்தையின் பாதம் மற்றும் கால் விரல்களில் எலி கடித்த காயம் இருந்ததாகவும், கீழே ரத்தம் கொட்டியிருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், இதை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இதய செயலிழப்பு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், குற்றச்சாட்டு அடிப்படையில், விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.