Breaking News
80 வயதை கடந்த முதியோர்களுக்கு ஓய்வூதிய தொகை வீட்டிற்கே அனுப்பப்படும் : தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான 60 வயது கடந்த முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், வேளாண் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தற்போது மாதாந்திர ஓய்வூதிய தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் 29 லட்சத்து 48 ஆயிரத்து 527 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போதைய நடைமுறையின்படி, ஓய்வூதிய தொகையானது வங்கிகளின் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பயனாளிகள் குடியிருக்கும் கிராமத்தில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகையினை பயோமெட்ரிக் கருவி மூலம் வழங்கி வருகின்றனர். இதற்கு சேவை கட்டணமாக பயனாளி ஒருவருக்கு ரூ.30 வீதம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பொது இடங்களில் வைத்து பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்ததன் காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களை தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதிய தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வுக்கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது.

கடந்த 23.4.2018 அன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 80 வயதினைக் கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதியத் தொகையினை வழங்கும் முறையினை மீண்டும் அஞ்சல் துறை மூலம் கொண்டு வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 80 வயதை கடந்த ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 308 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளின்படி வயது முதிர்ந்த இப்பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பணம் அஞ்சல் மூலம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.