Breaking News

சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கத்தில் மருந்து வினியோகஸ்தர்கள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது நாட்டில் ‘ஆன்-லைன்’ மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதுவரை, வீட்டு உபயோகப் பொருட்களை தான் ‘ஆன்-லைனில்’ பல நிறுவனங்கள் விற்பனை செய்து வந்தன. இப்போது, சில தனியார் நிறுவனங்கள், மருந்து மாத்திரைகளையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. இதை அனுமதித்தால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.

ஏனென்றால், போலியான, காலாவதியான, கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மருந்துகளை அந்த நிறுவனம், பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். மேலும், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், விதிகள் மற்றும் மருந்துக்கடைச் சட்டப்படி இதுபோல மருந்துகளை ‘ஆன்-லைன்’ மூலம் விற்பனை செய்ய முடியாது.

இந்த விற்பனை முறையினால், லட்சக்கணக்கான மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்கள் எல்லாம் வெளிநாடுகளில் உள்ளன.

அந்த நிறுவனங்கள், இந்திய சட்டவிதிகளை பின்பற்றுவது இல்லை. மருந்துகளை விற்பனை செய்ய சட்டப்படியாக உரிமமும் பெறவில்லை. எனவே, ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த ஜூன் மாதம் இரு மனுக்களையும் அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மருந்துகளை விற்பனை செய்யும் இணையதளத்தை முடக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். பின்னர், நாடு முழுவதும் ‘ஆன்-லைன்’ மூலம் மருந்துகளை விற்பனை செய்ய வருகிற 9-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.