ஆப்கானிஸ்தானில் சிறைக்கு வெளியே தற்கொலைப்படை தாக்குதல்; 7 பேர் சாவு
தலீபான் பயங்கரவாதிகள் உள்பட நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புல்–இ–சார்கி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்ப்பதற்காக சிறையின் நுழைவாயில் அருகே காத்துக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. சிறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.
எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி சிறை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஜீப் தனிஷ் கூறுகையில், ‘‘இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல். சிறை ஊழியர்கள் வந்த பஸ்சை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை’’ என்றார்.