Breaking News
கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை 104 ரன்னில் சுருட்டி இந்திய அணி அசத்தல் வெற்றி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரு மாற்றமாக காயமடைந்துள்ள ஆஷ்லே நர்ஸ் மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு தேவேந்திர பிஷூ, ஒஷானே தாமஸ் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறிது நேரத்திலேயே தனது முடிவு தவறு என்பதை அவர் உணர்ந்து இருப்பார். பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். தொடக்க வீரர் கீரன் பவெல் (0) புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரில், ஸ்விங் ஆன பந்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் (0) பும்ராவின் வேகப்பந்து வீச்சில் மண்ணை கவ்வினார். பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.

ஆடுகளம் இரு வித தன்மை கொண்டதாக காணப்பட்டது. ஓரளவு பவுன்சும் ஆனது. சில பந்துகள் அதிகம் எழும்பாமலும் சென்றது. இதை சரியாக கணிக்க தவறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக தாரைவார்த்து, தள்ளாடினர். முந்தைய ஆட்டங்களில் அதிரடியில் மிரட்டிய ஹெட்மயர் (9) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்யப்பட்ட போது, அது துல்லியமான எல்.பி.டபிள்யூ. என்பது தெரியவந்ததால், நடுவர் தீர்ப்பை மாற்றிக் கொண்டார்.

ரோவ்மன் பவெல் (16 ரன்), சாமுவேல்ஸ் (24 ரன்), கேப்டன் ஜாசன் ஹோல்டர் (25 ரன்) ஆகியோரைத் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 31.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்களில் சுருண்டது. இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீசின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1997-ம் ஆண்டு போர்ட்ஆப்ஸ்பெயினில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 121 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் குறைந்த ஸ்கோராக இருந்தது.

இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் பந்து வீசிய 5 பவுலர்களும் தலா ஒரு மெய்டன் ஓவரை வீசினர்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (6 ரன்) ஏமாற்றம் அளித்தார். அதைத் தொடர்ந்து துணை கேப்டன் ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. கோலி 4 ரன்னில் இருந்த போது ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹோல்டர் கோட்டை விட்டார். ரோகித் சர்மா 18 ரன்களில் கேட்ச் ஆன போது, அது ‘நோ-பால்’ என அறிவிக்கப்பட்டதால் தப்பினார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ‘ஷாட்பிட்ச்’ பந்துகளாக வீசி நெருக்கடி கொடுத்து பார்த்தனர். இந்த வகை பந்துகளில் முதலில் தடுமாறிய ரோகித் சர்மா, பிறகு அவற்றை எல்லைக்கோட்டிற்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 4 சிக்சர்களும் தெறிக்கவிட்டு அசத்தினார்.

இந்திய அணி 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 63 ரன்களுடனும் (56 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), விராட் கோலி 33 ரன்களுடனும் (29 பந்து, 6 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ரவீந்திர ஜடேஜாவும், தொடர் நாயகன் விருதை விராட் கோலியும் (5 ஆட்டத்தில் 453 ரன்கள் சேர்ப்பு) பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே இந்திய அணி முதலாவது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் 224 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கண்டது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.