இந்தியா-பிரான்ஸ் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்தியா-பிரான்ஸ் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்தரங்கு நடந்தது. இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே சீக்லர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியா-பிரான்ஸ் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2009–ல் இருந்து இரட்டிப்பாகி இருக்கிறது. நாங்கள் இந்தியாவை வருவாய் ஆதாரமாகவோ, சந்தையாகவோ பார்க்கவில்லை. மாறாக உண்மையான மற்றும் விலைமதிப்பற்ற கூட்டாளியாகவே பார்க்கிறோம்’ என்றார்.
தங்கள் நாட்டை சேர்ந்த சுமார் 600 நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவதாக கூறிய அவர், இதன் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதும் இந்தியா-பிரான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே 200 மில்லியன் யூரோ சுமார் ரூ.1600 கோடி மதிப்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும், இதன் மூலம் மராட்டியத்தில் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் சீக்லர் குறிப்பிட்டார்.
இருநாட்டு உறவுகள் இந்த எண்களையும் தாண்டி மிகப்பெரிய உயரத்தை அடையும் சாத்தியங்கள் இருப்பதாக கூறிய சீக்லர், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி இருப்பதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார்.