Breaking News
பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது. இந்த திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்குவதற்கு முன்பாகவே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை தொடங்கப்படமாட்டாது. பசுமை வழிச்சாலை என்பது பசுமை நிறைந்த சாலை என கருத முடியாது. புதிய நெடுஞ்சாலைதான் பசுமை வழிச்சாலை என்று அழைக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழகத்தில் உள்ள பல்லுயிரியல் வகைகளை பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் பல்லுயிரியல் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் அவை செயல்படவில்லை’ என்றும் கூறினார். இதையடுத்து, அரசின் இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்னர், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியபோது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர்காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, இந்த திட்டத்துக்கு போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

‘இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த திட்டத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தது, அவர்களை கைது செய்தபோது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.