Breaking News
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை-அபராதம்

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க் கிழமை) கொண்டாடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டது. 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

என்றாலும் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது.

இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இதேபோல் பட்டாசு கடைகளில் அதிக புகை வரக்கூடிய மற்றும் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கவும், பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிப்பது தொடர்பாகவும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதையும், கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்வதையும் கண்காணிக்க தனி போலீஸ் படைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இதுதொடர்பாக கண்காணிப்பு தனிப் படைகள் அமைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

இதன்பேரில் தமிழகம் முழுவதும் சுமார் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோர்ட்டு உத்தரவை மீறி, பட்டாசு வெடித்தால் அது கோர்ட்டு அவமதிப்பு செயல் ஆகும்.

இதற்கு இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது.

எனவே பொதுமக்களும், பட்டாசு வியாபாரிகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில், நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும், கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமாக தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னை மாநகரம் பட்டாசு வெடியால் கோலாகலமாக காணப்படும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.