காய்கறியில் பட்டாசை சொருகினால் ‘பசுமை பட்டாசு’ டெல்லியில் வியாபாரிகள் நூதன போராட்டம்
பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக்கட்டுப்பாடு விதித்ததுடன், ஒலி அளவு, உடலுக்கு தீங்கான ரசாயன அளவு குறைந்த ‘பசுமை பட்டாசு’களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யுமாறு உத்தரவிட்டது.
வடமாநிலங்களில் நேற்று தீபாவளி கொண்டாடிய நிலையில், டெல்லியில் சதார் பஜார் வியாபாரிகள், பசுமை பட்டாசு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதன போராட்டம் நடத்தினர். அவர்கள், தங்கள் கைவசம் இருந்த பழைய பட்டாசுகளை பாகற்காய், காலிபிளவர், வெண்டைக்காய், குடை மிளகாய் போன்ற காய்கறிகளில் சொருகி வைத்து, ‘இவைதான் பசுமை பட்டாசுகள்’ என்று கிண்டல் செய்தனர். “இவை வெடிக்காவிட்டாலும், சாப்பிட உதவும்” என்று கூறினர்.
பெரும்பாலான வியாபாரிகள் கூறுகையில், ‘பசுமை பட்டாசு என்றால் என்னவென்றே தெரியவில்லை. கடைசி நிமிடத்தில் இந்த உத்தரவை பிறப்பிக்காமல், முன்கூட்டியே பிறப்பித்து இருந்தால், பசுமை பட்டாசு விற்பதற்கான உரிமம் வாங்க வியாபாரிகளுக்கு நேரம் கிடைத்து இருக்கும்’ என்றனர்.