வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் ரூ.56¾ கோடி சொத்துகள் முடக்கம் அமலாக்கத்துறை நடவடிக்கை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாத தொழில் அதிபர் நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவுக்காரர் மெகுல் சோக்சி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிரவ் மோடி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமாக இந்தியா மற்றும் பிறநாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது. அந்தவகையில் துபாயில் நிரவ் மோடி மற்றும் அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள 11 சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கி இருக்கிறது. அதன் மதிப்பு ரூ.56 கோடியே 80 லட்சம் என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில், வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சியின் நண்பரான தீபக் குல்கர்ணி என்பவரை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஹாங்காங்கில் உள்ள மெகுல் சோக்சியின் நிறுவனத்தின் இயக்குனராக தீபக் குல்கர்ணி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.