வடகொரிய தலைவருடனான அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை ரத்து
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இரு தரப்பிலும் உழைப்பது என உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பகைவர்களாக இருந்து வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் இடையே இணக்கமான நல்லுறவு மலர்ந்தது. ஆனால் அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா குறிப்பிடத்தக்க அளவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ளாத நிலையில், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்கிற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்தது.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நியூயார்க் நகரில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு தூதரும், மூத்த தலைவருமான கிம் யாங் சோலுடன் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதுபற்றி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சந்திப்பு மற்றொரு நாளில் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.
இன்று நடக்கவிருந்த சந்திப்பு ரத்தானதின் காரணம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.