திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் சென்னைக்கு வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்ட, இந்த புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும். பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக குறிப்பிட்டு இருக்கிறோம். இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை. இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.
20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும் நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை கடக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க, நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்றும் இப்போதைக்கு புயல் தாக்கும் அபாயம் நீடிப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்க தொடங்கும். பகல் 12 மணி அளவில் கடலூர்-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும். இந்த புயலின் தாக்கத்தால் சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை என்றாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறும்போது, ‘மழை பாதிப்பு குறித்து விரைந்து அறிந்து கொள்ள டி.என்.ஸ்மார்ட் என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போதையை சூழ்நிலையில் 4,400 இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது. அந்த பகுதிகளில் எல்லாம் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதற்கிடையே, கஜா புயலை எதிர்கொள்வது குறித்தும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு வழங்கினார். புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கும் மக்களை உடனடியாக மீட்பது, தற்காலிக தங்கும் இடங்களை உருவாக்குவது, தீயணைப்பு வாகனங்களை தகுந்த இடங்களில் நிறுத்துவது, முக்கியமான இடங்களில் மருத்துவ முகாம் அமைப்பது, பாதிப்பு மிகுந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரை அதிகமாக நிறுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, நேற்று மாலை தலைமை செயலகத்தில், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கலந்துரையாடினார். அப்போது அவர் கஜா புயல் தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.