Breaking News
தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 10-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 11-ந் தேதி புயலாக மாறியது.

இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இது முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 15-ந் தேதி (நாளை) முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது கடலூர்-பாம்பன் இடையே அதே 15-ந் தேதி பிற்பகலில் கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு வட கிழக்கே சுமார் 720 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து 15-ந் தேதி (நாளை) பிற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 15-ந் தேதி காலை முதல் புயல் கரையை கடக்கும் வரை கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். சில நேரத்தில் 100 கிலோ மீட்டர் வரையிலும் வீசும்.

தமிழக மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுசேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் 15-ந் தேதி பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை இருக்கும்.

மீனவர்கள் 15-ந் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னைக்கு இந்த புயலினால் நேரடியான பாதிப்பு இல்லை. கிழக்கு திசை காற்று இருப்பதால் 15, 16, 17-ந் தேதிகளில் சென்னையில் மழை பெய்யும்.

இந்த ‘கஜா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தீவிர புயலாக மாறும். ஆனால் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு வரும் போது அது மீண்டும் புயலாக மாறி, கடலூர்-பாம்பன் இடையே புயலாகவே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ புயல் நகர்வு வேகம் குறைந்து இருந்தது. வளிமண்டலத்தின் மேலடுக்கில் எதிரெதிர் திசையில் நகர்ந்து செல்லும் காற்றின் அமைப்புக்கு இடையில் புயல் இருந்தது.

இதன் காரணமாக கஜா புயல் நகர்வு வேகம் மணிக்கு 3 முதல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, நிலையாக இருந்தது. அதனால் தான் கரையை கடப்பது 15-ந் தேதி முற்பகலில் இருந்து பிற்பகலுக்கு மாறி உள்ளது. தற்போது எதிரெதிர் திசை காற்றில் ஒன்று நகர்ந்துவிட்டதால், ‘கஜா’ புயல் தற்போது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசையில் நகருகிறது.

கஜா புயல், புயலாகவே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி புயலாக கடக்காமல் தாழ்வு மண்டலமாக கரையை கடந்தாலும் தமிழகத்துக்கு நல்ல மழை இருக்கும். தாழ்வு மண்டலமாக இல்லாமல் வலு இழந்து கடந்தாலும், ஓரளவு மழை இருக்கும். ஆக தமிழக கடலோர மாவட்டங்களில் நிச்சயம் மழை இருக்கும்.

வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 1-ந் தேதி முதல் தற்போது (நேற்று) வரை 27 செ.மீ. தமிழகத்தில் மழை பதிவாக வேண்டும். ஆனால் 20 செ.மீ. தான் மழை பொழிந்து இருக்கிறது. இது இயல்பை விட 27 சதவீதம் குறைவு ஆகும். தற்போது வரும் புயலினால் மழை பெய்யும் போது இயல்பையொட்டி மழை அளவை தமிழகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கஜா புயல் தற்போது வேகமாக தமிழகத்தை நெருங்குவதால் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மழை இருக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நாகர்கோவிலில் 2 செ.மீ., மயிலாடியில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.