நாளை மாலை கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 10-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த 11-ந் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது. இது முதலில் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 15-ந் தேதி (நாளை) முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது கடலூர்-பாம்பன் இடையே அதே 15-ந் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கஜா புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது. கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 540 கி.,மீட்டர் தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 640 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. காலை 5.30 மணி நிலவரப்படி 6 கி.மீட்டர் வேகத்தில் மெதுவாக கஜா புயல் நகர்ந்து வருகிறது என்றும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.