அனுமதி, விளக்கம் தேவையில்லை சந்தேகப்பட்டால் உடனே வரி ரெய்டு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்
புதுடெல்லி: வருமான வரி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2017ல், திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது. இதன்படி சந்தேக நபர்கள் மீது கீழ்நிலை அதிகாரியே ரெய்டு நடத்த முடியும். அதுமட்டுமின்றி, வருமான வரி சோதனை நடத்துவதற்கான காரணத்தை கூட சம்பந்தப்பட்டவரிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ கூட தெரிவிக்க வேண்டியதில்லை. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என்ற விளக்கம் கூட அளிக்க தேவையில்லை. 1962ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து வரி தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பு இருந்த விதிமுறைகளின்படி வருமான வரி ரெய்டு மற்றும் பறிமுதல், சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரம் முதன்மை ஆணையரிடம் இருந்தது.
இதை முதன்மை ஆணையர் நிலையில் இருந்து 3 அல்லது 4 நிலைகள் கீழ் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அளிக்க புதிய நிதி மசோதா வகை செய்கிறது.
ரெய்டில் கணக்கில் காட்டப்படாத அல்லது கருப்பு பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்து மதிப்பு ₹50 லட்சம் இருந்தால், இதுகுறித்து 10 ஆண்டுக்கு முன்பிருந்தே விசாரணையை துவக்க கீழ் நிலை அதிகாரிக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. இதற்கு முன்பு இந்த விசாரணை காலம் 6 ஆண்டுகளாக இருந்தது.
இதுபோல், பல்வேறு அதிரடி திருத்தங்களை வருமான வரி சட்டத்தில் மேற்கொள்ள நிதி மசோதா வகை செய்கிறது. இதுபோல், நிறுவனங்கள் மீது நடத்தப்பட உள்ள இந்த அதிரடி நடவடிக்கைகளை அறக்கட்டளை அமைப்புகள் மீதும் செயல்படுத்த மசோதா வகை செய்கிறது. வரி ரெய்டுகளை நடத்தி அதன் மூலம் வரி வசூலை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பாளர்கள் மீது கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவும் மத்திய அரசு உத்தேசித்திருந்தாலும், ரெய்டு என்ற பெயரில் துன்புறுத்தலுக்கும், சட்ட விதிகளை தவறாக பயன்படுத்தவும் வழி வகுக்கும் என நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவகையில் வருமான வரித்துறையின் செயல் திறனை அதிகரிக்க இது உதவி புரிந்தாலும், சட்டவிதிகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விதிகளை அமைக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.