சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை பெண்கள் அமைப்புகள் சில வரவேற்றாலும், அய்யப்ப பக்தர்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.
ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற அளவு நிலைமை மோசமானது. பதற்றம் நிலவியது. பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பல இளம்பெண்கள் அய்யப்பன் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள வலியநடை பந்தல் வரை சென்றும், கடும் எதிர்ப்பால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உருவானது.
திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பாலராமவர்மாவின் பிறந்த தினத்தையொட்டி கடந்த 5-ந் தேதி நடை திறந்து, 6-ந் தேதி சாத்தப்பட்டபோதும், பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றை விசாரணைக்கு ஏற்றபோதும், முந்தைய உத்தரவுக்கு தடை பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதில் விசாரணை ஜனவரி மாதம் 22-ந் தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் சபரிமலையில் இன்று (16-ந் தேதி) நடை திறக்க உள்ளது. மண்டல பூஜை, மகர விளக்கு வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. சபரிமலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பா, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக பெண்ணியவாதி திருப்தி தேசாய் விமானம் மூலமாக கொச்சி வந்துள்ளார். திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்துக்கு வெளியே கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. போராட்டம் காரணமாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத திருப்தி தேசாய் மற்றும் அவருடன் வந்த குழுவினர், காலை உணவை விமான நிலையத்திற்குள்ளேயே வைத்து உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.