மெரினாவில் மாணவர் புரட்சி நினைவு சின்னம் விரைவில் திமுக ஆட்சி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பள்ளிக் கூடங்களை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நினைவுச் சின்னம் மெரினாவில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் தூர் வாரும் இயந்திரம் 64வது வட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. என் தொகுதியில் இருக்கக் கூடிய 3 பள்ளிகளை ஆய்வு செய்தேன்.
கூடுதல் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் வேண்டும் என்று பள்ளியின் சார்பில் கோரப்பட்டது. இந்த வசதிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டாயம் செய்து தரப்படும். அந்த நிதியை இதற்காக பயன்படுத்த முடியாது என்று விதி இருந்தால் என் சொந்த நிதியில் இருந்து இந்த வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளேன்.
வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. விழுந்த மரங்களுக்கு ஈடாக கொளத்தூர் தொகுதியில் ஒரு வட்டத்திற்கு 200 மரங்கள் நட திட்டமிட்டுள்ளோம். அதன் தொடக்கமாக இன்று 10 மரங்களை நட்டுள்ளோம். தொடர்ந்து 1500 மரங்கள் நடப்பட்டு அது திமுகவினரால் பராமரிக்கப்படும்.
கடலில் கச்சா எண்ணெய் கொட்டி பரவி வருவதால் எந்த வித பாதிப்பும் இல்லை என்று சட்டமன்றத்தில் மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஆனால் இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியதன் நினைவாக மெரினாவில் நினைவுச் சின்னம் அமைப்பட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த அரசு அதனைச் செய்ய வேண்டும். அதிமுக அரசு செய்யவில்லை என்றால் விரைவில் அமைய உள்ள திமுக ஆட்சியில் நினைவுச் சின்னம் வைக்கப்படும்.
காஸ் மானியம் மட்டுமல்ல சர்க்கரை மானியத்தையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இது வருத்தப்படக் கூடிய செய்தி. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
மத்திய அரசு பிரதமர் மோடி சுயநலத்தோடு இந்த பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டுதான் எய்ம்ஸ் மருத்துவமனை குஜராத்தில் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது காண்பிக்கிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.