Breaking News
102 துணை மின்நிலையங்கள் பாதிப்பு: ‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்

‘கஜா’ புயலால் மின்சாரத்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

‘கஜா’ புயல் கரை கடந்ததையொட்டி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் இருந்தது.
பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. 7 மாவட்டங்களிலும் மொத்தம் 20 ஆயிரம் மின் கம்பங்கள், 102 துணை மின்நிலையங்கள், 495 மின் கடத்திகள்(டிரான்ஸ்பார்ம்), 100 மின்மாற்றிகள், 500 கிலோ மீட்டர் மின் வழித்தடங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்டங்களில் தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதால் திருச்சி, கோவை மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள், மின் கம்பிகள் மற்றும் தளவாட பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப பிற மாவட்டங்களில் இருந்து தளவாட பொருட்கள் வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கண்காணிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து ஏற்கனவே இயக்குனர்(மின் தொடரமைப்பு) அனுப்பி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க எரிசக்தி துறை செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குனர் பி.என்.ஸ்ரீதர், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் எஸ்.சண்முகம், இயக்குனர் (பகிர்மானம்) எம்.ஏ.ஹெலன் ஆகியோர் இன்று(நேற்று) அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு உயர் அலுவலர்கள் குழுவுடன் விரைந்துள்ளனர்.

இந்த 3 மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின் வினியோகம் சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் 100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.