Breaking News
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு

அ.தி.மு.க. பொது செயலாளராகவும், முதல்–அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

வி.கே.சசிகலா

தமிழகத்தின் முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க. பொது செயலாளராக வி.கே.சசிகலா பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆனால், அ.தி.மு.க. அமைச்சர்களில் ஒருசிலர் கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததுடன், வி.கே.சசிகலா தான் முதல்–அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், தமிழகத்தின் புதிய முதல்–அமைச்சராக வி.கே.சசிகலா எப்போது அறிவிக்கப்படுவார்? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 27–ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் எந்த முக்கிய அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆலோசனை
இந்த நிலையில், ஒரு வார கால இடைவெளியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நேற்று மீண்டும் கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, இந்த கூட்டத்தில் கண்டிப்பாக வி.கே.சசிகலா முதல்–அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று காலை 11 மணி அளவில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டன் இல்லம் சென்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், மற்றொரு புறம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வரத்தொடங்கினார்கள். கூட்டம் சரியாக மதியம் 2 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை கூட்டத்தை முடித்துக்கொண்டு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு வர மதியம் 2.10 மணி ஆகிவிட்டது.

முதல்–அமைச்சராக தேர்வு
எனவே, அதன் பிறகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 133 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். சபாநாயகர் ப.தனபாலும், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட கே.கதிர்காமுவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. கட்சியின் புதிய தலைவராக (முதல்–அமைச்சர்) வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றும் வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்துபோட்டார்கள்.

சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்ட தகவல், அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

தலைமை கழகத்தில் உற்சாக வரவேற்பு
அதன்பிறகு, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வி.கே.சசிகலா காரில் புறப்பட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். வழி நெடுக நின்ற அ.தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.

மாலை 3.10 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வி.கே.சசிகலா வந்தார். அவரை, பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். வளாகத்தில் நின்ற தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

பின்னர், முதல் தளத்திற்கு சென்ற வி.கே.சசிகலா தொண்டர்களை நோக்கி இரட்டை விரலை காண்பித்தார். அதன் பிறகு அங்கு நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அவருக்கு, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேச்சு
அனைவரது வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்ட வி.கே.சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஒருசில வார்த்தைகள் பேசினார்.

அதன்பிறகு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு வி.கே.சசிகலா புறப்பட்டு சென்றார்.

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (நேற்று) பிற்பகல் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சியின் தலைவராக, கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

9–ந் தேதி பதவி ஏற்பு
தமிழகத்தின் புதிய முதல்–அமைச்சராக வி.கே.சசிகலா வருகிற 9–ந் தேதி (வியாழக்கிழமை) பதவி ஏற்க இருக்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

அதற்கு முன்னதாக கவர்னரை சந்தித்து சசிகலா சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான நகலை கொடுத்து, பதவி ஏற்க அழைக்குமாறு கேட்டுக்கொள்வார். அதன்பிறகு புதிய முதல்–அமைச்சராக பதவி ஏற்க வருமாறு சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார்.

ஆர்.கே.நகரில் போட்டி?
முதல்–அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் வி.கே.சசிகலா, அடுத்த 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகவேண்டும். தற்போதைய நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது.

முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்க இருக்கும் வி.கே.சசிகலா, தமிழக வரலாற்றில் 13–வது முதல்–அமைச்சர், அ.தி.மு.க.வின் 5–வது முதல்–அமைச்சர், 3–வது பெண் முதல்–அமைச்சர் என்ற சிறப்புகளை பெற இருக்கிறார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.