Breaking News
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று வருகை 3 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள்

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கி உள்ளது. அரசு மட்டுமின்றி பல தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
புயலால் நாசமான டெல்டா மாவட்டங் களை முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பார்வையிட்டார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், சேதமதிப்பு பற்றிய விவரங்களையும் பிரதமரிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதி உதவியை பெறுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாலை டெல்லி சென்றார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்கு சென்றார். அங்கு 9.45 மணிக்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கி கூறிய எடப்பாடி பழனிசாமி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை மோடி ஏற்றுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் மாலையில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வர இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பிரதமரை காலையில் நான் சந்தித்த போது, தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறினார். அதன்படி மத்தியகுழு நாளை (அதாவது இன்று) மாலை சென்னை வர இருக்கிறது. அந்த குழுவினர் வந்ததும், அமைச்சர்களுடன் கலந்து பேசி, அவர்கள் எந்தெந்த இடங்களுக்கு செல்வது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 நாட்கள் பார்வையிடுவார்கள் என்றும், பின்னர் டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் அப்போது அவர் கூறினார்.

அ.தி.மு.க. எம்.பி. க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்றும் பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் 5 பேர் கொண்ட மத்திய குழுவுக்கு உள்துறை அமைச்சகத்தின் நீதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமை தாங்குகிறார். விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை வந்து சேரும் இந்த குழுவினர் நாளை (சனிக்கிழமை) முதல் திங்கட்கிழமை வரை 3 நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சென்று பார்வையிடுவார்கள் என்று தெரி கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.