கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் கோர தாண்டவமாடியது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பேரழிவை சந்தித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் (நீதித்துறை) டேனியல் ரிச்சர்டு, மத்திய நிதித்துறை ஆலோசகர் (செலவினங்கள்) கவுல், மத்திய வேளாண்மைத்துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதார துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர்.
இவர்கள் சென்னையில் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். மத்திய குழுவினர் நேற்று 2-வது நாளாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் புயலால் சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். புலவன்காடு கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முற்றிலும் அழிந்துபோன தென்னந்தோப்பினை பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில், 282 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி சேதமடைந்துள்ளதையும், மன்சூர், அப்துல் கபூர் ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதையும் பார்வையிட்டு சேதம் குறித்து கேட்டறிந்தனர்.
சென்ற இடங்களில் எல்லாம் தென்னை விவசாயிகள், புயலுக்கு தங்களது வாழ்வாதாரமாக திகழ்ந்த தென்னை மரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்பதாக கண்ணீர்விட்டு கதறினர்.
மல்லிப்பட்டினம் கடலோர கிராமத்தில் மீன்பிடி துறைமுகம், மீனவர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், சேதம் குறித்து மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். 246 விசைப்படகுகள், 832 என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 147 கட்டுமர படகுகள், 1,428 மீன்பிடி வலைகள், 1440 என்ஜின்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டு மீன்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனா்.
தஞ்சை ஒரத்தநாடு புதூர் பகுதியில் சேதம் அடைந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது ஆறுமுகத்தின் மகள் பிரபா, எனது தந்தை மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார். புயலுக்கு வீடு முற்றிலும் சேதம் அடைந்ததால் அவர் படுக்கக்கூட இடமின்றி நிர்க்கதியாக உள்ளார் என கண்ணீருடன் கூறினார்.
மத்திய குழு புலவன்காடு பகுதியில் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை பார்வையிட்டபோது திடீரென சரோஜா என்ற பெண் மத்திய குழுவினரின் காலில் விழுந்து, எங்களுக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன. இதனால் எனது வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டு வர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி கதறி அழுதார். இதுபோல பல பெண்கள் வழியில் குழுவினரின் காலில் விழுந்து கதறினர்.
தஞ்சை மாவட்டத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு திருவாரூர் புறப்பட்ட மத்திய குழுவை சேர்ந்த டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறும்போது, ‘லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் பகுதியில் மத்திய குழுவினரிடம் புகார் தெரிவிப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு இருந்தனர். மத்திய குழுவினரை சந்திக்க முற்பட்டும் அவர்களால் முடியவில்லை. தங்களை போலீசார் தடுத்துவிட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து, பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு இதுவரை வராதது ஏன்? சாலை ஓரங்களில் மட்டும் செல்கிறீர்கள். கிராமங்களுக்குள் வருவதில்லை என சரமாரியாக கேள்விகளை கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்ட சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். பின்னர் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை கிராமத்தில் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களையும், மா மரங்களையும், தொண்டியக்காடு கிராமத்தில் சேதமடைந்த வீடுகளையும் பார்வையிட்டனர்.
பின்னர் பல கிராமங்களில் சேதமடைந்த வீடுகளையும், சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களையும் காரில் சென்றபடியே பார்வையிட்டனர். கற்பகநாதர்குளம் கிராமத்தில் நிவாரண முகாமில் இருந்த மக்கள் மத்திய குழுவினரை பார்க்க வேகமாக வந்தனர். ஆனால் அதற்குள் மத்திய குழுவினர் சென்ற வாகனங்கள் மக்களை கடந்துசென்றது.
இதனால் மக்கள் தங்களை சந்திக்காமல் செல்வதாக கூறி ஆவேசம் அடைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழுவினர் வாகனத்திற்கு பின்னால் சென்ற போலீஸ் மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டன. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
நாகை மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்கிறார்கள்.