புதுவையில் பா.ஜ.க. முழு அடைப்பு போராட்டம்; பல தனியார் பேருந்துகள் இயங்கவில்லை
சபரிமலை தரிசனத்திற்கு செல்ல 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவையில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முழுஅடைப்பு தேவையற்றது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுபற்றி புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் பேசும்பொழுது, சபரிமலை விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி முழுஅடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இது கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சினை. இதற்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது.
யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். கடைக்காரர்களை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது செய்யப்படுவார்கள். இதுதொடர்பாக காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வர்த்தகர்களையும் அழைத்து பேசி உள்ளோம் என கூறினார்.
இந்நிலையில், புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை. பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. போராட்டத்தினால் வன்முறை உருவாகாமல் தடுப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.