இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்க மாட்டேன் – அதிபர் சிறிசேனா அறிவிப்பு
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் அதிரடியாக பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கினார். இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் முறையான பிரதமர் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் அதிபர் சிறிசேனா நேற்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் மீண்டும் பிரதமராக விக்ரமசிங்கேயை நியமிப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனது முடிவால் அரசியலில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனாலும் இதை நான் தீவிரமான அரசியல் நெருக்கடியாக கருதவில்லை.
விக்ரமசிங்கே அரசு நிர்வாகத்தில் பல தீவிரமான கொள்கை மாறுபாடுகளை கடைபிடித்தார். அதில் முதன்மையானது உயரதிகாரிகள் நியமனம். அறிவியல் அடிப்படையில் உயரதிகாரிகளை நியமிக்க கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்தேன். ஆனால் விக்ரமசிங்கே அதன் பரிந்துரையை நிராகரித்தார்.
உயர் கல்வித் துறையையும், நெடுஞ்சாலைத் துறையையும் ஒரே அமைச்சகம் கையாளும் என்று விக்ரமசிங்கே அறிவித்தார். மற்றொரு முக்கிய பிரச்சினை, மத்திய வங்கி கவர்னராக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை நியமித்தார். அவர் இலங்கையை சேர்ந்தவர் இல்லை, அவரை அந்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று நான் கூறியும், அதனை நிராகரித்துவிட்டு அவரையே வங்கி கவர்னராக நியமித்தார்.
மத்திய வங்கி பத்திரங்கள் வெளியிட்டதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மகேந்திரனே பொறுப்பு. விசாரணையில் அவர் குற்றவாளி என்றும் உறுதியானது. ஆனால் அவர் இப்போது தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்பது விக்ரமசிங்கேவுக்கு தெரியும்.
விக்ரமசிங்கேவின் 3 ஆண்டு பிரதமர் பதவிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளேன். இவ்வாறு சிறிசேனா கூறினார்.