Breaking News
புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்கிறார்

‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. தென்னை மரங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் சேதமடைந்துள்ளதால் பலர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். சில கிராமங்களில் இன்னும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதற்கிடையே ரத்து செய்யப்பட்ட புயல் சேத பகுதிகளை பார்வையிடும் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் மீண்டும் வகுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் சென்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார். இதற்காக இன்று இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து காரைக்கால் செல்லும் ரெயிலில் அவர் செல்கிறார். நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நாகை ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு விருந்தினர் இல்லத்துக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து புயலால் சேதமடைந்த நாகை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். அங்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும், முகாம்களில் இருப்பவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதனை முடித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி திருவாரூர் செல்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கின்றனர். நாகை, திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேதப்பகுதிகளை பார்வையிட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு திருவாரூரில் இருந்து மீண்டும் ரெயில் மூலம் சென்னை திரும்புகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.