அரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
‘பொதுநல வழக்குகளுக்கான மையம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊழல் தடுப்பு சட்டத்தின், திருத்தப்பட்ட 17ஏ (1) பிரிவின்படி, ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது விசாரணையை தொடங்குவதற்கு முன்அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மீதான விசாரணையை முற்றிலும் தடுக்கும் வகையில் உள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற சட்டப்பிரிவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு 2 தடவை அறிவித்த பிறகும், 3-வது முறையாக மத்திய அரசு திணித்துள்ளது.
தனது அரசுப்பணியை செய்யும்போது, அரசு ஊழியர் எடுக்கும் முடிவு அல்லது சிபாரிசு தொடர்பான குற்றங்களை பற்றிய புகார்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. பணி தொடர்பான குற்றமா என்று தீர்மானிப்பது போலீசாருக்கு கடினமாக இருக்கும். அப்படி தீர்மானித்தாலும், அது வழக்குக்கு வழிவகுத்து விடும். அதனால், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.
மேலும், முன்அனுமதி பெறுவதற்குள், அரசு ஊழியர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கும், அனுமதி கொடுப்பதை தடுப்பதற்கு வேலை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அனுமதி கொடுக்கும் பொறுப்பு, ஊழியர் பணியாற்றும் துறைக்கே இருப்பதால், மேலிடம் அவருக்கு சாதகமாக செயல்படும் நிலை உள்ளது. அத்துடன், அனுமதி பெறுதல் என்பதே இன்னொரு ஊழலுக்கு காரணமாகி விடும்.
அனுமதி பெற்று விசாரணையை தொடங்குவதற்குள் ஊழல் பணத்தை சொத்துகளாக மாற்றுவதற்கும், வெளிநாடுகளில் பதுக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, இந்த சட்டப்பிரிவு, ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பானதாக அமைவதுடன், ஊழலின் அளவை அதிகரித்து விடும். ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளை நீர்த்து போகச் செய்து விடும். ஆகவே, அந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார்.
பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.