மத்திய பிரதேசம், மிசோரம் மாநில வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பிரதமர் அறிவுறுத்தல்
மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநில சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாகுப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மிசோரம் மாநிலத்தை பொருத்தவரை அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இரு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் தெரியும்.
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயக திருவிழாவான தேர்தலில் மக்கள் கலந்து கொண்டு தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி இரு மாநில வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
“ மிசோரம் மாநிலத்தில் உள்ள எனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குறிப்பாக துடிப்புமிக்க இளம் வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் பிரதமர் மோடி டுவிட் செய்து, இரு மாநில மக்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் தினத்தன்று டுவிட்டர் வாயிலாக வாக்களிக்க வேண்டும் என்று வாக்களார்களுக்கு கோரிக்கை விடுப்பதை பிரதமர் மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.