‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தில் இருந்து இந்திய அதிகாரி நீரஜ் அரோரா ராஜினாமா
‘பேஸ்புக்’ போன்றே ‘வாட்ஸ் அப்’பும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நீரஜ் அரோரா. இந்தியர். டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்து பட்டம் பெற்றவர்.
இவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2011–ம் ஆண்டு முதல் ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். 2014–ம் ஆண்டு, அந்த நிறுவனத்தை ‘பேஸ்புக்’ நிறுவனம் கையகப்படுத்திய பின்னரும் தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில அவர் திடீரென பதவி விலகுகிறார்.
இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், ‘‘ வாட்ஸ் அப் நிறுவனத்தில் ஜான் கோம், பிரையன் ஆக்டன் (வாட்ஸ் அப் இணை நிறுவனர்கள்) ஆகியோரால் நான் கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. நகர்ந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரக்கூடிய ஆண்டுகளிலும் வாட்ஸ் அப் எளிமையான, பாதுகாப்பான, நம்பகமான தகவல் தொடர்பு தளமாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
‘வாட்ஸ் அப்’ குரூப் மூலமாக தவறான தகவல்களை அனுப்புவது சர்வதேச பிரச்சினையாகி வருகிறது. இந்த சவாலான நேரத்தில் நீரஜ் அரோரா பதவி விலகுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நீரஜ் அரோரா ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வரக்கூடும் என பேச்சு அடிபட்டது. ஆனால் அந்தப் பதவி கிறிஸ் டேனியல்ஸ் என்பவருக்கு கிடைத்தது.