நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை: 69-வது சுதந்திர தின விழாவில் இலங்கை அதிபர் உறுதி
இலங்கையில் நேற்று 69-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற விழாவில் அந் நாட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசும்போது, “தேசிய அளவில் நல்லிணக் கத்தை ஏற்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போல பொருளாதார சுதந்திரத்தை அடைவதற் காகவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
கொழும்பில் சுதந்திர தின கொண்டாட் டம் நடைபெற்ற நிலையில், வடக்கு மாகாண தலைநகர் யாழ்ப்பாணத் தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை வகித்த வடக்கு மாகாண கவுன்சிலர் எம்கே சிவாஜிலிங்கம் கூறும்போது, “சுதந்திர தினம் எங்களுக்கு கருப்பு தினம். இந்த நாளில் தமிழர்களாகிய நாங்கள் துக்கத்தில் இருக்கிறோம். ஏனென்றால், போரின்போது எங்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் திருப்பித் தரப்படவில்லை. காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அரசு வெளியிடவில்லை. தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
கடந்த 2009-ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தபோது, இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வி அடைந்தது. இந்த இறுதிக்கட்டப் போரில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்களை ராணுவம் கொன்று குவித்ததாக ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது. இதையடுத்து, இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற புகார் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
நன்றி : தி இந்து தமிழ்