தெலுங்கானாவில் 9.30 மணி நிலவரப்படி 10.15 சதவீத ஓட்டுப்பதிவு
தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் ஓட்டுப்பதிவுக்கு மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 446 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
தெலுங்கானாவில் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 10.15 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது. 10 மணி நிலவரப்படி 13.5 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
நிஸாமாபாத் போதாங்கலில் 177-வது வாக்குச்சாவடியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி. பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.
அதுபோல் நடிகர் நாகார்ஜூனா, நடிகர் சிரஞ்சீவி உள்பட சினிமா பிரபலங்களும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.