ராஜஸ்தான், சத்தீஷ்கர் முதல் மந்திரிகள் யார்? ராகுல் காந்தி இன்று முடிவு
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் (வசுந்தரா ராஜே சிந்தியா), மத்திய பிரதேசம் (சிவராஜ் சவுகான்), சத்தீஷ்கார் (ராமன் சிங்) ஆகிய 3 மாநிலங்களிலும், ஆட்சியை தக்க வைக்க தவறியது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. ம.பி.முதல்வராக யார் என்பதில் ஏற்பட்ட இழுபறிக்கு பின்னர் கமல் நாத் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இன்று கமல்நாத் முதல்வராக பதவியேற்கிறார்.
ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட்டை முதல் மந்திரியாக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரில் யார்? முதல்வர் என்பதை முடிவு செய்வதற்காக நேற்று இரவு முதல் காலை வரை நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்படவில்லை இந்நிலையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் யார் முதல் மந்திரி என்பதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரில், லோக்சபா, எம்.பி.,யான, தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பெஹல், மூத்த தலைவர், டி.எஸ். சிங்தியோ ஆகியோரின் பெயர்கள், பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புபேஷ் பெஹல் தான் முதல் மந்திரியாக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே இரு மாநிலங்களிலும் முதல் மந்திரி யார் என்பது இன்று ராகுல் காந்தி முடிவு செய்கிறார். பின்னர் முதல் மந்திரியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.