தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் கடும் போட்டி: நடிகர் விஷாலின் மனு நிறுத்திவைப்பு
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன் மற்றும் கேயார் ஆகியோரின் தலைமையில் 3 அணிகள் போட்டியிடுகின்றன.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் விஷால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று விஷால் தலைமையில் தயாரிப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ், எஸ்.ஆர்.பிரபு, நந்தகோபால், சி.வி.குமார், பிரகாஷ்ராஜ், மிஷ்கின், பாண்டிராஜ் உள்ளிட்டவர்கள் தங்களுடைய அணி சார்பாக மனுத்தாக்கல் செய்தனர். எந்தெந்த பதவிக்கு யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்பதை விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
விஷால் அணியைத் தவிர்த்து கேயார் தலைமையில் ஒரு அணியும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த அணிகளிலும் எந்தெந்த பதவிக்கு யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நேற்று மாலை கேயார் மற்றும் ராதாகிருஷ்ணன் அணியைச் சார்ந்த உறுப்பினர்கள் நீதிபதி ராஜேஷ் வரனிடம், “நடிகர் சங்கத்தில் செய லாளராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகள்படி தேர்தலில் போட்டியிட முடியாது” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு நீதிபதி ராஜேஷ்வரன், “கடைசியாக நடைபெற்ற செயற்குழுவில்தான் இந்த விதியைச் சேர்த்துள்ளீர்கள். அதனால் இந்த விதியை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் வேண்டுமானால் நீதிமன்றத்தை நாடிக் கொள்ளுங்கள்” என்றார். அதன்பின் விஷாலின் மனு நிறுத்திவைக்கப்பட்டது.
திங்கள்கிழமையன்று இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் விஷாலின் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்