பிரதமர் நரேந்திர மோடி 10-ந் தேதி திருப்பூர் வருகை
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
அப்போது அவர் சென்னையில் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இந்த விழாவில் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
அதைத் தொடர்ந்து பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி 10-ந் தேதி திருப்பூரில் இருந்து அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அவர் பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்- தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விழாவில் மதுரை- சென்னை இடையே அதிவேக தேஜஸ் சொகுசு ரெயில் போக்குவரத்தை மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கான புதிய கட்டிடத்தையும் பிரதமர் திறந்துவைக்கிறார். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயிரத்து 467 கோடியில் புதிய முனையம், திருச்சி விமான நிலையத்தில் ரூ.950 கோடியில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டிடம் (புதிய முனையம்) ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 35 கிலோமீட்டர் தூரம் கொண்ட பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.)- வண்ணாரப்பேட்டை (வழி சென்டிரல்) இடையே 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்க கடந்த வாரம் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தில் இருந்து 2½ கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் மேல் பாம்பன் ரெயில் பாலம், 1914-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், தற்போது மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.
தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் இந்த பகுதியில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்பட உள்ளது.
இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கடல் நீரால் அரிப்பு ஏற்படாத வகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ‘சிலீப்பர்’ கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படுகிறது. இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும். 4 ஆண்டுகளில் புதிய பாலம் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.