மிதாலி ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? – கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம்
வெஸ்ட்இண்டீசில் கடந்த நவம்பர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 36 வயதான மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவரை சேர்க்காதது சர்ச்சையாக உருவெடுத்தது. பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் இந்த நடவடிக்கையால் அணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதனால் பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இதேபோல் இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜ் மீண்டும் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையாகவில்லை என்றாலும் டெலிவிஷன் வர்ணனையாளர்கள் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ்க்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர்.
மிதாலி சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த விளக்கத்தில் ‘இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு மண்ணில் எங்களுக்கு இந்த 3 ஆட்டங்கள் தான் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் அதிகம் இந்திய சூழ்நிலையில் தான் விளையாட இருக்கிறோம். அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு அளித்தோம்’ என்றார்.