Breaking News
குக்கர் சின்னம் கேட்டு டி.டி.வி.தினகரன் மனு: தேர்தல் கமிஷன் முடிவு செய்ய வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வாக அறிவித்து, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை தற்போது டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் இடைக்கால மனு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், தான் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் விதத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தனக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படியும், தனது அணிக்கான பெயரை தான் குறிப்பிட்டுள்ள 3 பெயர்களில் இருந்து ஒன்றை அனுமதிக்கும்படியும் தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிடக்கோரி இருந்தார்.

அவருடைய இந்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு, பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி உத்தரவிட்டது.

டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்க டெல்லி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது தவறு என்று கூறி, அந்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி இடைக்கால தடை விதித்தது. அத்துடன், சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரச்சினை மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது” என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல் பாலாஜி சீனிவாசன் ஆகியோர் வாதாடினார்கள். கடந்த ஜனவரி 24-ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

டி.டி.வி.தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வழங்கிய தீர்ப்பை தேர்தல் கமிஷன் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து மார்ச் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுகிறது. தேர்தல் கமிஷன் டி.டி.வி.தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரின் மனுவை பரிசீலித்து, டெல்லி ஐகோர்ட்டு 9.3.2018 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உரிய முடிவெடுக்க வேண்டும்.

டெல்லி ஐகோர்ட்டில் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட்டு இன்று (நேற்று) தொடங்கி 4 வாரத்துக்குள் முடித்து வைக்கவேண்டும்.

சின்னம் தொடர்பாக டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனு மீது, கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மேற்கண்ட 4 வார ‘கெடு’ முடிவடைந்து 2 வாரத்துக்குள் தேர்தல் கமிஷன் உரிய முடிவெடுக்க வேண்டும்.

இதற்கிடையே, மேலே குறிப்பிட்ட மொத்தம் 6 வார கால அவகாசத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏதாவது சட்டசபை தொகுதிக்கோ அல்லது நாடாளுமன்ற தொகுதிக்கோ தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிக்க நேரிட்டால், அப்படி அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்துக்குள், அல்லது அந்த தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதிக்கு முன்பே, டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தினகரன் அணிக்கு சின்னம் ஒதுக்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.