சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்
இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டி தாய்லாந்தில் நேற்று தொடங்கியது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 9 மாதங்களாக போட்டியில் பங்கேற்காத முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீராபாய் சானு 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்து கொண்டார்.
மணிப்பூரை சேர்ந்த 24 வயதான மீராபாய் சானு ‘ஸ்னாட்ச்’ முறையில் 82 கிலோவும், ‘கிளன் அண்ட் ஜெர்க்’ முறையில் 110 கிலோவும் தூக்கி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
பதக்கம் வென்ற மீராபாய் சானு அளித்த பேட்டியில், ‘காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு எனது முதல் சர்வதேச போட்டி இதுவாகும். தற்போது 100 சதவீத உடல் தகுதியுடன் இருப்பதாக உணருகிறேன். இது எனது மிகச்சிறந்த செயல்பாடு என்று சொல்ல முடியாது. எனது சிறப்பான செயல்பாட்டை (196 கிலோ) விட 4 கிலோ தான் குறைவாக தூக்கி இருக்கிறேன். எனவே இந்த செயல்பாடு எனக்கு திருப்தியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. 2017-ம் ஆண்டு உலக போட்டியில் 194 கிலோ எடை தூக்கி தான் தங்கப்பதக்கம் வென்றேன். எனது அடுத்த இலக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும். இந்த இரண்டு போட்டியும் எனக்கு மிகவும் முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.