வேலூர் ஜெயிலில் முருகனுக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. தமிழக அரசு 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தும், இதுவரை கவர்னர் முடிவெடுக்கவில்லை.
எங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று முருகன் கடந்த 7-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்றும் முருகனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவர் தண்ணீர் கூட குடிக்காமல் தீவிர உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியும், கணவர் முருகனுக்கு ஆதரவாகவும் நளினி மத்திய பெண்கள் ஜெயிலில் உண்ணாவிரதத்தை நேற்று காலை தொடங்கினார். இதுதொடர்பான கடிதத்தை நளினி நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.