கோடநாடு வழக்கில் கேரளாவில் 2 பேர் கைது
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்.24-ம் தேதி புகுந்த கும்பல், அங்கிருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 8-ம் தேதி உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி பி.வடமலை முன்னிலையில் நடந்தது. அன்றைய தினம் ஷயான், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, தீபு ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.வடமலை, ஷயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்தும், விசாரணைக்கு ஆஜராகாத 4 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று இரவு பிஜின்குட்டி, தீபு ஆகியோரை கேரள மாநிலம் பாலக்காட்டில் நீலகிரி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ஷயான், மனோஜ் தலைமறைவாக உள்ளனர்.