தமிழகம், புதுவையில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
குமரிக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மாலத்தீவு முதல் தெலங்கானா வரை நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து மாலத்தீவு, குமரிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோரப் பகுதி வரை நிலவி வருகிறது. அதன் காரணமாகவும், வங்கக் கடலிலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்று காரணமாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்