மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
மத்திய அரசை கண்டித்து டெல்லியில் இன்று பிரம்மாண்ட தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் இந்த மாபெரும் போராட்டத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடைபெறும் இந்த போராட்டத்தில், கொல்கத்தாவில் மம்தா பனர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லிக்கு மம்தா பானர்ஜி வருகை தந்தார். முன்னதாக, டெல்லிக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மம்தா பானர்ஜி, “ அதிகாரத்திற்கு மீண்டும் வர முடியாது என்பதை மோடி அறிந்துள்ளார். இன்னும் 15 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். புதிய அரசை காண நாம் விரும்புகிறோம். நாடு மாற்றத்தை விரும்புகிறது. ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவைக் காண நாடே விரும்புகிறது” என்றார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தலைவர்களின் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனினும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிகிறது.