Breaking News
இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்னில் ஆல்–அவுட் விஹாரி சதம் அடித்தார்

ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 330 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இரானி கோப்பை

ஆண்டுதோறும் நடப்பு ரஞ்சி சாம்பியனுக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையே இரானி கோப்பைக்கான 5 நாள் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி இந்த ஆண்டுக்கான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் ரஹானே தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை எதிர்த்து, நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா அணி மோதுகிறது. விதர்பா அணியில் மூத்த வீரர் வாசிம் ஜாபர் உடல்தகுதி பிரச்சினையால் சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் 13–வது முறையாக இரானி கோப்பை போட்டியில் பங்கேற்று சாதனை படைக்கும் வாய்ப்பு நழுவிப்போனது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் தொடக்க ஆட்டக்காரர் அன்மோல்பிரீத் சிங் (15 ரன்) ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு மயங்க் அகர்வாலும், ஹனுமா விஹாரியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரன்சேகரிப்பில் வேகம் காட்டிய மயங்க் அகர்வால் 5 ரன்னில் சதத்தை நழுவ விட்டார். அவர் 95 ரன்களில் (134 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இவர்கள் 2–வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் திரட்டினர்.
விஹாரி சதம்

இதன் பின்னர் ஹனுமா விஹாரி நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. கேப்டன் ரஹானே (13 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (19 ரன்), விக்கெட் கீப்பர் இஷான் கி‌ஷன் (2 ரன்) ஆகியோர் விதர்பாவின் சுழலில் சிக்கினர். இதற்கு மத்தியில் அபாரமாக ஆடிய ஹனுமா விஹாரி சதம் அடித்தார். அவர் தனது பங்குக்கு 114 ரன்கள் (211 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) சேர்த்த நிலையில் வெளியேறினார். இறுதி கட்டத்தில் ராகுல் சாஹர் (22 ரன்), அங்கித் ராஜ்பூத் (25 ரன்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து 300 ரன்களை கடக்க உதவிகரமாக இருந்தனர்.

முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் 330 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. விதர்பா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே, அக்‌ஷய் வஹாரே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் குர்பானி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று 2–வது நாளில் விதர்பா அணி தனது முதல் இன்னிங்சை ஆடும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.