பிரதமர் வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? : விஜய் மல்லையா
பார்லி., உரையின் போது பெயர் குறிப்பிடாமல் என்னை பற்றி பேசிய பிரதமர் மோடி, எனது கோரிக்கையை ஏற்காத வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன் என விஜய் மல்லையா கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய் மல்லையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பார்லி.,யில் பிரதமர் நிகழ்த்திய கடைசி உரை அனைவரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பி உள்ளது. அவர் திறமையான பேச்சாளர். அவர் பெயர் குறிப்பிடாமல் ரூ.9000 கோடியுடன் நாட்டை விட்டு ஓடியவர் என பேசினார். ஆனால் அவர் குறிப்பிட்டது என்னை தான். முழு கடன்தொகையையும் செலுத்த தயாராக உள்ளதாக நான் வங்கிகளிடம் கூறி விட்டேன். அந்த தொகையை கிங்பிஷர் நிறுவனத்தின் பொது நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி கூறி உள்ளேன். ஆனால் எனது கோரிக்கைகளை ஏற்க மறுத்தது ஏன் என வங்கிகளிடம் பிரதமர் கேள்வி கேட்காதது ஏன்?நான் நேர்மையாக, கடன் தொகையை திருப்பி செலுத்த தயாராக இருப்பதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன்? நான் எனது சொத்துக்களை மறைப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுவதாக மீடியாக்கள் கூறுகின்றன. நான் எனது சொத்துக்களை மறைத்தால் எவ்வாறு ஏறக்குறைய ரூ.14,000 கோடி மதிப்புடைய சொத்துக்களை கோர்ட்டில் ஒப்படைக்க முடியும்? மக்களை தவறாக நடத்துவது வெட்கப்பட வேண்டியது. ஆனால் ஆச்சரியப்படதக்கதல்ல என குறிப்பிட்டுள்ளார்.