விதிமுறைகளை மீறி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு – தாய்லாந்து இளவரசி மன்னிப்பு கோரினார்
தாய்லாந்தில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக ஆட்சியை கொண்டுவர வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, மன்னர் மகா வஜ்ரலோங்கோன் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதன்படி அடுத்த மார்ச் 24-ந் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதனை கடுமையாக எதிர்த்தார். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார். இதனையடுத்து பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் இருந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் “தாய்லாந்து நாட்டுக்கும், மக்களுக்கும் பணி செய்வதே என்னுடைய நேர்மையான நோக்கமாகும். இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி பிரதமர் வேட்பாளராக அறிவித்துகொண்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.