மாறி, மாறி பேசுபவர்கள் யார்? சட்டசபையில் மு.க.ஸ்டாலின் – ஓ.பன்னீர்செல்வம் மோதல்
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக சிலவற்றை குறிப்பிட்டு பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் பதில் அளிக்க எழுந்தார்.
அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “உறுப்பினர் ஆஸ்டின் இங்கும், அங்கும் இருந்துகொண்டு மாறி, மாறி பேசி வருகிறார்” என்றார். உடனே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, “ஆஸ்டின் மாறி, மாறி பேசுவது இருக்கட்டும். நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) மாறி, மாறி பேசவில்லையா?” என்றார்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “மாறுதல் ஏற்படும்போது நாங்கள் மாறி, மாறி பேசியிருக்கிறோம். ஆஸ்டின் எங்களால் உருவாக்கப்பட்டவர். இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாறி, மாறி பேசுகிறார்” என்றார். மீண்டும் எழுந்த மு.க.ஸ்டாலின், “உங்கள் ஓட்டையே நீங்கள் மாற்றிப் போடவில்லையா?” என்றார். அதாவது, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்ததை சுட்டிக்காட்டி அவ்வாறு பேசினார்.
அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், “எந்த நோக்கத்துக்காக அது நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.