ரூ.6,000 நிதியுதவி திட்டம் பிப். 24-ம் தேதி தொடக்கம்
ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதிதொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அன்று நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது, விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கி திட்டத்தை அவர் தொடங்கிவைக்கிறார்.
இத்தகவலை மத்திய வேளாண் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் டெல்லியில் நேற்று தெரிவித்தார். இதற்காக, மாநில அரசுகளிடம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பட்டியலைக் கேட்டுள்ளதாகவும் பிரதமர் தொடங்கிவைத்தபின் தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் முதல் தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் இரண்டாவது தவணைத் தொகை ஏப்ரல்1-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.