Breaking News
மோசடி மேல் மோசடிகள்… விசாரணைமேல் விசாரணைகள்: 2020 தேர்தல் வரை தாங்குவாரா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்?

அதிபர் பதவி ஏற்றுக் கொண்டது முதல் புதிய அமெரிக்காவை கட்டமைக்கப் போகிறேன் என்று அமெரிக்க மக்கள் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அதிபர் ட்ரம்ப் மீது ஏகப்பட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதால் 2020 அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்யக் கோரப்படலாம் என்று தெரிகிறது.

அதிபராவதற்கு ரஷ்யா உதவி புரிந்த விவகாரம், ட்ரம்புக்கும் அமெரிக்க வைரியான ரஷ்யாவுக்குமான மறைமுகமான வர்த்தகம் உள்ளிட்ட தொடர்புகள் ஆகியவை ‘ரஷ்யாகேட்’ என்று அங்கு ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் மீதான முல்லர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதோடு மட்டுமல்லாமல், ஜனநாயகக் கட்சிக் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க காங்கிரஸ் மேற்பார்வையில் ட்ரம்ப் மீது ஏகப்பட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ட்ரம்பின் பதவிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ட்ரம்ப் குடும்ப தொழில்கள், வர்த்தகங்கள் ஆகியவையும் இவை மீதான நியூயார்க், நியூஜெர்சி, வாஷிங்டன், டி.சி, மேரிலேண்ட் ஆகிய அரசுகள் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு முறைகேடுகளை குடைந்து வருவதுமே.

ட்ரம்பின் முன்னணி சுயசரிதையாளர் டேவிட் கேய் ஜான்ஸ்டன் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரின் கேள்விக்குரிய தொழில்முறைகள் குறித்துக் கூறிய போது, “ட்ரம்ப் கிரிமினல்கள் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் தாத்தா சியாட்டில் மற்றும் யுகான் மாகாணங்களில் விபச்சார விடுதிகளை நடத்திச் சொத்துகளை குவித்தவர். ட்ரம்பின் தந்தை ஃபிரெட்டின் தொழில் கூட்டாளி வில்லி டொமாசெலோ என்பவர் காம்பினோ கிரிமினல் குடும்பத்துக்கு நெருங்கிய தொடர்புடையவர். மேலும் ட்ரம்ப் தந்தை 36 மில்லியன் டாலர்கள் அரசுப் பணத்தை சுருட்டியது தொடர்பாக அமெரிக்க செனேட்டினால் விசாரிக்கப்பட்டவர். ட்ரம்பின் நாடகீயத் தன்மைகளை அவர் தன் தந்தையிடமிருந்து பெற்றுள்ளார் என்பதோடு ஒழுங்குமுறைக்குட்பட்ட கிரிமினல்களுடன் அவரது பழக்கவழக்கங்களும் அவரை ஒரு சிறந்த நடிகராக்கியுள்ளது” என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் தன்னைத்தானே கூறிக்கொள்ளும் வெற்றிகரமான ரியல் எஸ்டேட் தாதா என்ற பிம்பத்தில் ஏகப்பட்ட தொழில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. அதுவும் 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பிறகு மோசடிகள் அதிகரித்துள்ளன. 2005-11-ல் ரியல் எஸ்டேட் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாக கோரிய ட்ரம்ப் பல்கலைக் கழகம் என்ற அமைப்பு இந்த கோர்சில் இணைந்தவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலர்களை வசூலித்தது, ஆனால் அந்த வகுப்புகளில் ஒன்றுமேயில்லை, வெறும் விரயம் என்று பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். முதலில் இதை மறுத்த ட்ரம்ப் பிறகு 25 மில்லியன் டாலர்கள் செட்டில்மெண்டுக்கு ஒப்புக் கொண்டார்.

இந்த பல்கலைக் கழகம் நியூயார்க் மாகாணத்தில் முறையாக பட்டயம் வழங்கப்படாதது. ஆனால் அது உயர் கல்வி நிறுவனம் என்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டு தவறிழைத்தது. அப்போது அவர் “யாரை வேண்டுமானாலும் நீங்கள் உட்பட நான் ரியல் எஸ்டேட் முதலாளியாக்குவேன்” என்று பெருமையடித்துக் கொண்டார். ஆனால் இதை நம்பிச் சேர்ந்தவர்களுக்கு பட்டை நாமமே காத்திருந்தது, ட்ரம்பின் ஆளுயர புகைப்படத்துடன் போட்டோ மட்டுமே எடுத்துக் கொள்ள முடிந்ததுதான் சேர்ந்தவர்கள் கண்ட பலன் என்று நியூயார்க்கர் என்ற பத்திரிகை கடும் கேலி செய்திருந்தது.

இந்நிலையில் 2-013-ல் நியூயார்க்கின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் எரிக் ஷ்னெய்டர்மேன் ட்ரம்ப் பல்கலைக் கழகத்துக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து 2018 பிப்ரவரியில் ட்ரம்ப் யுனிவர்சிட்டியை நம்பி சேர்ந்து ஏமாந்த மாணவர்கள் 4,000 பேர் 90% பணத்தைத் திரும்பப் பெறுவது உறுதியானது.

இது தவிர 2018-ல் ட்ரம்ப் மீதும் அவரது தொழில்கள் நடைமுறை மோசடிகள் சார்ந்தும் ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் டொனால்ட் ஜே.ட்ரம்ப் அறக்கட்டளை பெரிய அளவில் மாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகர அட்டர்னி ஜெனரல் பார்பாரா அண்டர்வுட் ட்ரம்ப் அறக்கட்டளை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த அறக்கட்டளை மூலம் ட்ரம்புக்கும், ட்ரம்ப் குழுமங்களுக்கும் சாதகமான சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

அக்டோபர் 2018- நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நடத்திய புலனாய்வு விசாரணையில் தானாகவே பெரிய ரியல் எஸ்டேட் பில்லியனரானதாக ட்ரம்ப் கூறிக்கொண்டு வந்தது உடைக்கப்பட்டது. அதாவது தன் தந்தை தனக்கு ஒன்றும் வைத்து விட்டுப் போகவில்லை, எல்லாம் தான் சொந்த உழைப்பு என்று அவர் பெருமைப் பீற்றிக் கொண்டது பொய் என்பது அம்பலமானது. அதாவது அவர் குழந்தையாக இருந்த போதே அவர் தந்தை ஃப்ரெட்டின் ரியல் எஸ்டேட் தொழிலிலிருந்து அவருக்கு இன்றைய மதிப்பில் 413 மில்லியன் டாலர்கள் கிடைத்தது என்பதுதான் உண்மை என்று புலனாய்வு விசாரணை அம்பலப்படுத்தியது.

மேலும் அதே விசாரணையில் அம்பலமான இன்னொரு விஷயம் என்னவெனில் தன் தந்தையின் தொழில்களில் வரும் லாபங்கள் மீதான வரிகளை ஏய்க்க ட்ரம்ப் உதவி புரிந்ததன் மூலமே ட்ரம்புக்கு இவ்வளவு பணம் சேர்ந்தது. இவரும் இவரது உறவினர்களும் போலி நிறுவனங்களைத் தொடங்கி தங்கள் பெற்றோரிடமிருந்து அன்பளிப்பாக வந்தது என்று மில்லியன் டாலர்கள் தொகையை மோசடியாக சம்பாதித்துள்ளனர். தன் தந்தைக்கு முறையற்ற வரிச்சலுகைகளையும் ட்ரம்ப் பெற்றுத்தந்துள்ளதையும் நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியது. பெற்றோரின் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ட்ரம்புக்கும் அவரது உறவினர்களுக்கும் கைமாறிய போது சொத்துக்களின் உண்மையான மதிப்பை மறைத்து குறைமதிப்பீடு செய்து அதன் மூலமும் ஏகப்பட்ட வரி ஏய்ப்புகள் நடந்துள்ளன.

நியூயார்க் டைம்ஸ் புலன் விசாரணையில் அம்பலமான இன்னொரு அதிர்ச்சி என்னவெனில், ட்ரம்பின் பெற்றோர் ஃபிரெட், மேரி ட்ரம்ப் ஆகியோர் தன் வாரிசுகளுக்கு 1 பில்லியன் டாலர்கள் சொத்தை எழுதிவைத்துள்ளனர். ஆனால் இதற்கான வரி 55%. ஆகவே ட்ரம்ப் குறைந்தது 550 மில்லியன் டாலர்கள் வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் 52.2 மில்லியன் டாலர்கள்தான் வரியாகச் செலுத்தினார், இது 5% வரித்தொகையே.

நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தலில் கடுப்பான ட்ரம்பின் வழக்கறிஞர் இந்த ரிப்போர்ட் முழுதும் தவறு மற்றும் பொய் என்று வழக்கம்போல் எதிர்ப்பு காட்டினார். ஆனால் டைம்ஸின் விரிவான புலன் விசாரணையின் காரணமாக நியூயார்க் வரித்துறை ட்ரம்ப் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.

நியூயார்க் வழக்குடன் கூடவே மேரிலேண்ட், வாஷிங்டன், டிசி, நியூஜெர்சி அரசுகளும் ட்ரம்ப் மீது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது. பெட்மின்ஸ்டரில் உள்ள ட்ரம்ப் தேசிய கால்ஃப் கிளப்பின் சூப்பர்வைசர்கள் நிறைய குடியேற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதான புகார்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றிய 18 பெண்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 5 பெண்கள் ட்ரம்ப் கால்ஃப் கிளப்பில் தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதாகவும் நிறவெறி வசை தங்கள் மேல் ஏவப்பட்டதாகவும் புகார் கூறியுள்ளனர்.

மேலும் சமீபத்தில் அமெரிக்க கோர்ட் ஒன்று கூறிய தீர்ப்பின் அடிப்படையில் வாஷிங்டன், டி.சி. ஆகியவற்றின் அட்டர்னி ஜெனரல்கள் ட்ரம்ப் இண்டெர்னேஷனல் ஹோட்டலிலிருந்து வரும் வருவாயிலிருந்து சட்ட விரோதமாக லாபமடைந்த வழக்கும் 2017 முதல் நடைபெற்று வருகிறது. மேலும் பாலியல் புகார்களும் ஆங்காங்கே விசாரிக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவுடனான தொடர்பு, அதன் உதவியில் அதிபரான விவகாரம் தொடர்பான முல்லர் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளிவந்தால் மேலும் விசாரணைகள், வழக்குகள் என்று ட்ரம்ப் வாழ்க்கை நரகமாகி விடும் என்கிறது அமெரிக்க ஊடகங்கள். ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க காங்கிரஸ் அதிபர் ட்ரம்பின் அவரது குடும்பத்தினரின் முறைகேடுகளை விசாரிக்கும். இதைவிட பயங்கரமான அச்சுறுத்தல் நியூயார்க் நகர ஏ.ஜியாக சமீபத்தில் பொறுப்பேற்ற லெடிஷியா ஜேம்ஸ், “அதிபர் ட்ரம்ப் திவாலாகிவிடும் தறுவாயில் இருந்தார் என்று கூறப்பட்டது, ஆனால் திடீரென அவரிடம் பணம் குவிந்தது. உள்நாட்டு வங்கிகள் அவருக்குக் கொடுக்கவில்லை என்பதை அறிவோம். பின் எங்கிருந்துதான் அவருக்கு இத்தனை பணம் கிடைத்தது?” என்று கேட்டுள்ளார். இவரும் வழக்கு தொடர்வார் என்ற நிலையே உள்ளது.

இந்த வழக்குகளில் டொனால்ட் ஜுனியர், இவாங்கா மற்றும் எரிக் ட்ரம்ப், ட்ரம்பின் மருமகன் குஷ்னர் ஆகியோர் முறைகேடுகள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டால் அதிபர் ட்ரம்புக்கு மன்னிக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் தன் அதிபர் பதவியை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவை எட்டலாம். 2020 தேர்தல் அவ்வளவு தூரத்திலும் இல்லை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.