Breaking News
ஜோ ரூட்டை அவமதித்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார், கேப்ரியல்

செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3–வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஓரின சேர்க்கையாளருடன் ஒப்பிட்டு வாக்குவாதம் செய்தது சர்ச்சையாக கிளம்பியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நடத்தை விதியை மீறிய அவருக்கு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது கருத்துக்காக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடமும், அந்த அணி வீரர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து கேப்ரியல் கூறுகையில், ‘நான் பயன்படுத்தியது மோசமான வார்த்தை என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் இது. அந்த சமயத்தில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை நோக்கி, ‘என்னை பார்த்து ஏன் சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஆண்கள் என்றால் உங்களுக்கு இஷ்டமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தாதே. ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’ என்று பதில் அளித்தார். அதற்கு நான் ‘அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறினேன். இந்த பிரச்சினைக்கு பிறகு நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.