லாலு மகனின் அசர வைக்கும் ஆடம்பர வாழ்க்கை
நட்சத்திர ஓட்டலை மிஞ்சும் அளவிலான ஆடம்பர வாழ்க்கையை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் வாழ்ந்து வந்தது தற்போது அம்பலமாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ள
கார் முன்னாள் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவ், தற்போது எதிர்கட்சி தலைவராக உள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகும் அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து வந்தார். இது தொடர்பாக பாட்னா ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டை நாடினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், தேஜஸ்வி யாதவ் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டதுடன், ஐகோர்ட் உத்தரவை மதிக்காததற்காக ரூ.50,000 அபராதம் விதித்தது. இதனையடுத்து சமீபத்தில் தேஜஸ்வி யாதவ், அரசு பங்களாவை காலி செய்தார்.
இந்நிலையில் தற்போது துணை முதல்வராக உள்ள சுஷில் மோடி, தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவிற்கு சென்றார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்த்து ஆச்சரியம் அடைந்த சுஷில் மோடி, தான் இந்த பங்களாவில் வசிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாட்னாவில் 5 நட்சத்திர ஓட்டல்கள் ஒன்று கூட கிடையாது. அந்த அளவிற்கு சிறிய நகரம். ஆனால் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்களை மிஞ்சும் அளவிற்கு இந்த பங்களாவில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இத்தாலியன் டைல்ஸ், மர வேலைப்பாடுகளால் ஆன தரைகள், லெதர் சோபாக்கள், பில்லியர்டு விளையாட்டு மேஜை உள்ளிட்டவைகள் உள்ளன. ஓவிய அறை முதல் கழிப்பறை வரை அனைத்தும் விலை உயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
2016 முதல் தேஜஸ்வி யாதவ் வசித்து வந்த இந்த பங்களாவில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பர பொருட்களின் விலை ரூ.5 கோடிக்கும் குறையாமல் இருக்கும். நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி பங்களாவிற்கும், பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் பங்களாவிற்கும் நான் சென்றுள்ளேன். அங்கு எல்லாம் கூட இது போன்று எந்த வசதியும் இல்லை. இந்த ஆடம்பர பங்களாவில் வசிக்க எனக்கு விருப்பமில்லை. ராஜேந்திர நகரில் எனது பெற்றோர் எனக்கு அளித்த 3 அறைகள் கொண்ட பூர்வீக வீட்டிலேயே வசிக்க உள்ளேன். இந்த வீட்டில் உள்ள எந்த பொருளையும் நான் தொடப் போவதில்லை என்றார்.