பொருளாளர் பதவி பறிப்பு அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நீக்கம்
சசிகலா இன்று காலை அவர் அ.தி.மு.க. மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடிவு செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆரால் உருவாக் கப்பட்டு, கோடிக்கணக் கான தமிழர்களின் மனதில் இரண்டற கலந்து விட்ட அ.தி.மு.க.வில், இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பமும், சர்ச்சைகளும் வெடித்துள்ளன. எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, ஜெயலலிதா அ.தி.மு.க.வை கட்டிக்காத்து, அந்த இயக் கத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்து, அகில இந்திய அளவில் எந்த ஒரு மாநில கட்சிக்கும் இல்லாத வகை யில் பலம் பொருந்திய கட்சியாக மாற்றினார். பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்து அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது.
இத்தகைய அ.தி.மு.க. ஜெயலலிதா மறைவால் இன்று கலகலத்து போய் உள்ளது.
மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியையும், முதல்- அமைச்சர் பதவியையும் ஒருங்கே வகித்து வந்தார். அவர் மறைந்ததும் முதல்- அமைச்சர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், பொதுச் செயலாளர் பொறுப்பை சசிகலாவும் ஏற்றனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் பதவியையும் பெற சசிகலா முடிவு செய்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் கடிதம் பெற்றார்.
இது அ.தி.மு.க.வில் பூகம்பத்தை ஏற்படுத்தி யுள்ளது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் மவுனமாக இருந்தார். நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்து நிருபர்களுக்கு பேட் டியளித்த அவர், தன்னை முதல்வர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
அதோடு சசிகலா குடும்பத்தினர் மீதும், அ.தி.மு.க. மூத்த அமைச்சர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார். இது அ.தி.மு.க.வில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சசிகலா வையும், அவர் குடும்பத் தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் உடனே அ.தி.மு.க. மூத்த அமைச்சர்களை போயஸ் கார்டனுக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறிக்க முடிவு செய்யப் பட்டது.
அதன்படி ஓ.பன்னீர் செல்வம் வசம் இருந்த அ.தி.மு.க. பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று நள்ளிரவு சசிகலா வெளியிட்டார். அ.தி.மு.க. புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, ‘‘அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் நிர்ப்பந்தம் செய்யவில்லை. அவர் ஏற்படுத்தும் குழப்பத்துக்கு பின்னணியில் தி.மு.க. உள்ளது’’ என்றார்.
அடுத்தக்கட்டமாக எத்தகைய அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று சசிகலா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை அவர் அ.தி.மு.க. மூத்த அமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வினர் ஆதரவு கொடுப்பதைத் தடுப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடிவு செய்யப்பட்டது. சசிகலா நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்த போதும், ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவோம் என்று கூறியிருந்தார். எனவே விரைவில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டால், அது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும். அவரது பதவி பறிப்புக்கு அ.தி.மு.க.வில் ஒரு சாராரிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது.
நன்றி : தினத்தந்தி