பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் நேரம் இது : மோடி
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போரிட வேண்டிய நேரம் இது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அப்போது பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா – தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்பு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு உதாரணமாக தான் இந்திய ராணுவத்தில் கே 9 வஜ்ரா சேர்க்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் மூன் ஜே இன்னிற்கு நன்றிகள்.
உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து, போரிட வேண்டிய நேரம் இது. சர்வதேச அளவிலான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பில் இரு நாடுகளின் நட்புறவு மேலும் பலப்பட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழிவகுக்கும். பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்காக சாலை வரைபட தயாரிப்பிற்கும், பாதுகாப்பு உபகரண உற்பத்திற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றார்.